Monday, 12 June 2017

இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் தொடர் - 3


அல்லாஹ்வின் உதவி: பத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும்,அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.

(நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.

وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ (44) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا لَقِيتُمْ فِئَةً فَاثْبُتُوا وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ. (القرآن 8:43,44)

நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும்,அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44)

வானவர்களின் வருகை: அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான்.  வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான். ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ وَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ بَنَانٍ. (القرآن 8:12)

(நபியே!) உமதிரட்சகன்பால்,நிச்சியமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் விசுவாசம் கொண்டோரை உறுதிப்படுத்துங்கள், (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டுவிடுவேன். ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களுக்கு மேல் வெட்டுங்கள்ளூ அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள் என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீ மூலம்) அறிவித்ததா (நினைத்துப் பார்ப்பீராக!) (அல்குர்ஆன் 08:12) பத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி கடுமையாகத் தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். புறமுதுகு காட்டியும் ஓடினர்.

அன்ஸாரிகளில் ஒருவர் அப்பாஸ் (ரலி) (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் (ரலி),அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால்,அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை! என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி (ரளி) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத்)

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ. (القرآن 8:17)

(விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17)

பத்ர் போரின் வெற்றியின்பின்னனியில் நபியின்துஆ இருப்பதை நாம்மறக்கமுடியாது.

அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பத்ருப்போர் நடைபெற்ற போது யுத்த களத்தில் இருந்த நான் மூன்று முறை நபியின் கூடாரத்துக்கு சென்றேன். நபியவர்கள் ஸஜ்தாவில் இருந்து கொண்டு ‘’யா ஹய்யு யாகய்யூம்’’என்று துஆ செய்ததை நான் கண்டேன். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். (நூல்.பைஹகீ. நஸயி.)

நபியின் துஆவின் காரணமாக பத்ரின் வெற்றி கிடைத்தது மட்டுமல்ல. யுத்தம் தொடங்கும் முன்பாகவே வெற்றியின் நம்பிக்கையும் சொல்லப்பட்டது. எதிரிகளில் யார் கொல்லப்படுவார். எந்த இடத்தில் கொல்லப்படுவார் என்பதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

فندب رسول الله صلى الله عليه وسلم الناس فانطلقوا حتى نزلوا بدرا فقال رسول الله صلى الله عليه وسلم : " هذا مصرع فلان " ويضع يده على الأرض ههنا وههنا قا ل : فما ماط أحدهم عن موضع يد رسول الله صلى الله عليه وسلم . رواه مسلم

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் போர் தொடங்கும்முன் எங்களிடம் சில குறிப்பிட்ட இடங்களில் கைவைத்து இது இவர் கொல்லப்படும் இடம் என்றார்கள். எதிரிகளில் கொல்லப்பட்ட எவரும் நபி (ஸல்) அவர்கள் கைவைத்து காட்டிய இடத்தை கொஞ்சம் கூட கடக்கவில்லை. (நூல்: முஸ்லிம். மிஸ்காத். பக்கம்.531)

சத்தியத்திற்கு வெற்றி:

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ قَالَ ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ أَبِي طَلْحَةَ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلًا مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ فَقُذِفُوا فِي طَوِيٍّ مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيثٍ مُخْبِثٍ وَكَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالْعَرْصَةِ ثَلَاثَ لَيَالٍ فَلَمَّا كَانَ بِبَدْرٍ الْيَوْمَ الثَّالِثَ أَمَرَ بِرَاحِلَتِهِ فَشُدَّ عَلَيْهَا رَحْلُهَا ثُمَّ مَشَى وَاتَّبَعَهُ أَصْحَابُهُ وَقَالُوا مَا نُرَى يَنْطَلِقُ إِلَّا لِبَعْضِ حَاجَتِهِ حَتَّى قَامَ عَلَى شَفَةِ الرَّكِيِّ فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ يَا فُلَانُ بْنَ فُلَانٍ وَيَا فُلَانُ بْنَ فُلَانٍ أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمْ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا قَالَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ مَا تُكَلِّمُ مِنْ أَجْسَادٍ لَا أَرْوَاحَ لَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ. (بخارى-3976)

போரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24 பேர் கொல்லப்பட்டனர். (புகாரி 3976,) மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில்தொழும்போது ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:முஸ்லிம்களில் 14 போர் ஷஹீதாகினர். அவர்களில் அறுவர் குறைஷியர் (முஹாஜிர்கள்), எண்மர் அன்ஸாரிகள் ஆவர். எனவே,முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது.

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. (القرآن 3:123)

பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)

வெற்றிக்கான காரணிகள்:

·      ஈமானிய பலம்
அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும்.

·         முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை.

·         நபி (ஸல்) அவர்களின்சி றந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும். புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும்.

·         காபிர்களின் லோகாயத இலக்கும்,ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும்.

விளைவுகள்: 

·         முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்:

·         முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல்.

·         இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல்.

·         நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல்.

·         மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை.

·         ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும்.

இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது.

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி,முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக.

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும்,புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர். சுத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது.

பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய அணியை எதிர்கொள்ள, ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக இருந்தனர்.

முஸ்லிம்களை விட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் அனைத்தையும் மிகைத்து,வெற்றிவாகை சூடினர்.

உலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத் தொடர்புடையதாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ர் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.

உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலில் பலம் குறைந்தவர்கள், ஆயுத,படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை,தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.

ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள் காரண காரியவாத தொடர்பில் மட்டுமல்லாது, இறை நாட்டத்தினூடாகவும் நிகழ்வுகளை நோக்கும் போது, வெற்றிக்கனிகள் கண்ணில்பட்டு மின்னுகின்றன.

அத்தகைய மன உணர்வோடு பத்ர் யுத்தம் தொடர்பான சுருக்கமான வரலாற்றைப் பின்னணியுடன், அதன் மூலம் நாம் எத்தகைய படிப்பினை பெறவேண்டும் என்பதையும் நோக்குவோம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 13-06-2017

No comments:

Post a Comment