பத்ருப்போரை படம் பிடித்துக்காட்டும்
௲ரத்துல் அன்ஃபால்:
முதலாவதாக: முஸ்லிம்களுக்கு அவர்களிடம் இருந்த சில ஒழுக்கக் குறைவுகளை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். அதற்குக் காரணம்,முஸ்லிம்கள் தங்கள் ஆன்மாக்களை உயர் பண்புகளால் முழுமைபெற செய்ய வேண்டும் குறைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதே!
இரண்டாவதாக: முஸ்லிம்கள் தங்களது வீரம் மற்றும் துணிவைப் பார்த்து தற்பெருமைக்கு ஆளாகிவிடக் கூடாது. மாறாக,அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும் தனக்கும் தனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதற்காகவேதான் முஸ்லிம்களுக்கு மறைவிலிருந்து செய்த உதவியை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மூன்றாவதாக: இந்த ஆபத்தானப் போரை நபி (ஸல்) அவர்கள் எந்த இலட்சியங்களையும்,நோக்கங்களையும் முன்னிட்டு சந்தித்தார்களோ அவற்றை விரிவாக அல்லாஹ் கூறுகிறான். அதன் பிறகு போர்களில் வெற்றி பெறக் காரணமாக அமையும் தன்மைகளையும், குணங்களையும் முஸ்லிம்களுக்குக் குறிப்பிடுகிறான்.
நான்காவதாக:இணைவைப்பவர்கள்,நயவஞ்சகர்கள், யூதர்கள், போரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். சத்தியத்திற்குப் பணிந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை.
ஐந்தவதாக: போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட்கள் தொடர்பான சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான்.
ஆறாவதாக: போரிடுவது அல்லது சமாதானம் செய்து கொள்வது ஆகிய இவ்விரண்டின் அடிப்படைகள் மற்றும் சட்டங்களை முஸ்லிம்களுக்கு விவரிக்கின்றான். அத்தகைய ஒரு காலக் கட்டத்தை அப்போது இஸ்லாமிய அழைப்புப்பணி அடைந்துவிட்டது என்பதே அதற்குக் காரணம். அதன் மூலமே முஸ்லிம்கள் புரியும் போருக்கும் அறியாமைக்கால மக்கள் செய்த போருக்கும் வேறுபாடு ஏற்படும். முஸ்லிம்கள் பிறரைப் பார்க்கிலும் தனித்தன்மை பெற்று,குணத்திலும் பண்பிலும் மேலோங்கி விளங்குவார்கள். மேலும், உலக மக்கள் இஸ்லாமை ஒரு தத்துவ சிந்தனையாக (சித்தாந்தமாக) மட்டும் பார்க்காமல், தான் அழைக்கும் அடிப்படைகளை கொண்டு தன்னைச் சார்ந்தோரைப் பண்பட செய்யும் ஒரு வாழ்க்கை நெறியாக இஸ்லாமைப் பார்ப்பார்கள்.
ஏழாவதாக: இஸ்லாமிய நாட்டுக்குரிய அடிப்படை சட்டங்களை அல்லாஹ் நிர்ணயிக்கின்றான். அதாவது, இஸ்லாமிய அரசாங்கத்திற்குள் வாழும் முஸ்லிம்களுக்கும் அதற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்குமிடையில் சட்ட வித்தியாசங்கள் உள்ளன என்பதே அது.
ஹிஜ் இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் அந்த ஆண்டுதான் கடமையாக்கப்பட்டது,இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’எனப்படும் மார்க்க வரிகளின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டன. இது பூமியில் பயணித்து, பொருள் ஈட்ட முடியாமல் சிரமத்தில் வாடி வதங்கிய பெரும்பாலான ஏழை முஹாஜிர்களின் (மதீனாவில் வாழும் மக்கா முஸ்லிம்களின்) பொருளாதாரச் சுமையை எளிதாக்கியது.
பத்ர் போரில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஹிஜ்ரி 2, ஷவ்வால் மாதத்தில் கொண்டாடிய நோன்புப் பெருநாளே முஸ்லிம்களுக்கு தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெருநாட்களில் முந்தியதும் மிகச் சிறந்ததுமாகும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றி எனும் கிரீடத்தை அணிவித்த பின்பு,அவர்களுக்கு அவன் வழங்கிய இந்தப் பெருநாள் எவ்வளவு அதிசயத்தக்கது! தங்களது இல்லங்களிலிருந்து வெளியேறி “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்),லாயிலாஹஇல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை),அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே)” என்று சப்தமிட்டுக் கூறியவர்களாக வந்து,நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தொழுத அந்த தொழுகையின் காட்சிதான் எவ்வளவு
அற்புதமானது! அல்லாஹ்வின் உதவியையும் அளவிலா அருளையும் பெற்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு கொண்டன. அவனது நேசத்தையும் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ள துடியாய்த் துடித்தன. இதைத்தான் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இந்த வசனத்தில் நினைவூட்டுகிறான்:
وَاذْكُرُوا إِذْ أَنْتُمْ قَلِيلٌ مُسْتَضْعَفُونَ فِي الْأَرْضِ تَخَافُونَ أَنْ يَتَخَطَّفَكُمُ النَّاسُ فَآوَاكُمْ وَأَيَّدَكُمْ
بِنَصْرِهِ وَرَزَقَكُمْ مِنَ الطَّيِّبَاتِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ. (القرآن 8:26)
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து, உங்களை எந்த மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கி விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். மேலும், நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன் 8:26) (ரஹீகுல் மக்தூம்)
யுத்தம் ஆரம்பம்: நபி (ஸல்) அவர்கள் தனது போராளிகளை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து,அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடன், காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.
அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.
ஹம்ஸா (ரலி) X உத்பா
உபைதா (ரலி) X வலீத்
அலி (ரலி) X ஷைபா
இதன் பின்னர் பாரிய யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா (ரலி ) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான (புகாரி 3141) ஹதீஸ் குறிப்பு ஒன்றுள்ளது.
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: بَيْنَا أَنَا وَاقِفٌ فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ فَنَظَرْتُ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَإِذَا أَنَا بِغُلَامَيْنِ مِنْ الْأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا تَمَنَّيْتُ أَنْ أَكُونَ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا فَغَمَزَنِي أَحَدُهُمَا فَقَالَ يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ قُلْتُ نَعَمْ مَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي قَالَ أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لَا يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الْأَعْجَلُ مِنَّا فَتَعَجَّبْتُ لِذَلِكَ فَغَمَزَنِي الْآخَرُ فَقَالَ لِي مِثْلَهَا فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَجُولُ فِي النَّاسِ قُلْتُ أَلَا إِنَّ هَذَا صَاحِبُكُمَا الَّذِي سَأَلْتُمَانِي فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا فَضَرَبَاهُ حَتَّى قَتَلَاهُ ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَاهُ فَقَالَ أَيُّكُمَا قَتَلَهُ قَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا أَنَا قَتَلْتُهُ فَقَالَ هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا قَالَا لَا فَنَظَرَ فِي السَّيْفَيْنِ فَقَالَ كِلَاكُمَا قَتَلَهُ سَلَبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ وَكَانَا مُعَاذَ بْنَ عَفْرَاءَ وَمُعَاذَ بْنَ عَمْرِو بْنِ الجَمُوحِ. (بخارى-3141)
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.
அவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா? என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை?என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது
ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்.) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.
சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை) நோக்கி சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா (ரலி ) அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் (ர லி) அவர்களும் ஆவர்.(புகாரீ 3141)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 12-06-2017.

No comments:
Post a Comment