Tuesday, 20 June 2017

மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 24

நோன்பு - 24


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் 

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ரமலானில் என்ன செய்தோம்?

========================

ரமலான் மாதம்
அல்லாஹ்விடத்திலே சிறந்த மாதம். அல்குர்ஆன்
இறக்கியருளப்பட்ட மாதம். லைலதுல் கத்ருடைய மாதம்.
பாவமீட்சி பெற்றுத் தரக்கூடிய மாதம். நரக விடுதலையை,
அல்லாஹ்வின் அருளை பெற்றுத் தரும் மாதம்.
இவ்வளவு சிறப்பு பொருந்திய
மாதத்தை வழியனுப்ப
தயாராகும் இவ்வேளையில்
நம்மிடம் நாமே சில
கேள்விகளுக்கு பதிலை தேடிக் கொண்டு சுய
மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். அம்மாதத்தை
சரியாக கழித்திருந்தால் நாம்
வெற்றி பெற்றவர்களாக
ஆகிவிடுவோம்,
இல்லையெனில்
நஷ்டவாளிகளே!

சென்ற வருடம் ரமழானை
அடைந்தும் அதை சரிவர திட்டமிட்டு கழிக்காமல் விட்ட
நிலையிலே அது எம்மைக் கடந்து சென்றிருக்கலாம்.
தொடர்ந்தும் அவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இந்த
ரமலானில் விட்ட தவறுகள் குறித்து முஹாஸபா
செய்வதுடன் நம் நிலையை திடமாக ஆக்கிக் கொள்ள
வேண்டும். அதற்கு
முயற்சிக்காத வரை மீண்டும் அந்த தவறுகள் ஏற்பட வாய்ப்புகள்
ஏற்படலாம். நம்மை நாமே மாற்றிக்
கொள்ளாத வரை அல்லாஹ் நம்
நிலையை மாற்ற மாட்டான்.
அல்லாஹ் அல்குர்ஆனில்
இவ்வாறு கூறுகிறான்:
“ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அந்த
சமூகத்துக்குப் புரிந்த
அருளை மாற்ற மாட்டான்”. அந்த வகையில் நாம் பின்வரும்
விஷயங்கள் பற்றி சற்று சுயவிசாரணை செய்து கொள்வோம்!

முதலாவதாக, அல்லாஹ்
அனுமதித்த காரணங்களுக்காக
அன்றி நோன்பை விடாமல் ஒழுங்காக நோற்றோமா? நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் வழங்கிய
சலுகைகளுக்காக அன்றி எவர் நோன்பை (வேண்டுமென்று)
விடுகிறாரோ அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு
நோற்றாலும் அது அந்த ஒரு நாளுக்கு ஈடாக மாட்டாது.”
(அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி)

இரண்டாவதாக, ஜமாஅத்
தொழுகை. ரமலானில் நாம் பெற்ற அடிப்படை பயிற்சிகளில்
ஒன்றான இந்த அமலை நாம் எந்த
அளவு முக்கியத்துவம்
கொடுத்து தொழுதோம்
என்று சற்று சிந்திக்க
வேண்டும். நம்மில் சிலர் ரமலான் மாதம் வந்து விட்டால்
மாத்திரம் பள்ளி வாயல்களோடு
தொடர்பை ஏற்படுத்திக்
கொள்கிறோம். ரமழான் முடிந்த
அடுத்த கணமே
தொழுகையை,
பள்ளிவாயலை மறந்து
விடுகிறோம்.
ரமலானில் ஸுபஹுத்
தொழுகை முதல் அனைத்து
தொழுகைக்காகவும்
பள்ளிவாயல்கள் நிறைந்து காணப்படும். ரமலான் கடந்து
விட்டால் பள்ளிவாயல்கள்
மீண்டும் வெறுமையாகி
விடும். ரமலானில் கிடைத்த
பயிற்சியை ரமலான்
முடிந்ததன் பிறகும்
அமல்படுத்த முயற்சிக்க
வேண்டும்.

மூன்றாவதாக,
கியாமுல்லைல் இரவு
வணக்கம். ஒவ்வொருவரும்
இரவு நேரத்தை சரிவரத் திட்டமிட்டு இரவு நேரத்
தொழுகையை கூட்டாக அல்லது தனியாக
நிறைவேற்றினோமா? நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
“ரமலானில் ஈமானோடும்
நன்மையை
எதிர்பார்த்தவராகவும் இரவு நேரத்தில் நின்று
வணங்குபவரின் முன்செய்த பாவங்கள்
மன்னிக்கப்பட்டுவிடும்.”
நான்காவதாக,
அல்குர்ஆனை ஓதினோமா?
குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ வீதம் நாம்
ஓதியிருக்க வேண்டும்.
அதன்படி முழு ரமலானிலும் ஒரு முறை குர்ஆனை ஓதி
முடித்திருக்கலாம். அப்படி ஓதி முடித்தோமா?
அதிகமானவர்கள் ஏனோதானோ
என்று அலட்சியமாக
இருந்துவிட்டோம்.
இவ்வாறான தவறுகள் இனி மேலும் நடைபெறாமல் இருக்க
முயற்சிக்க வேண்டும்.

ஐந்தாவதாக, ஆயிரம்
மாதங்களை விட சிறந்த அந்த
லைலத்துல் கத்ரை
அடைவதற்கான முயற்சியை
மேற்கொண்டோமா? அந்த இரவு இன்ன
 தினத்தில்தான் வரும் என்ற அறிவு நமக்கு
கொடுக்கப்படவில்லை.
குறித்த ஒரு இரவில் மாத்திரம்
நாம் அமல்களில் ஈடுபட்டு
லைலத்துல் கத்ரை அடைந்த
திருப்தியை அடைகிறோம்.
ரமலானை சிறந்த முறையில்
கழிக்க வேண்டும் என்பதற்காக
அல்லாஹ் அந்த இரவை மறைத்து
 வைத்திருக்கிறான்.
அதனை தேடிப்பெற முயற்சி
செய்தோமா?

ஆறாவதாக....  பாவமன்னிப்பு
பாவமீட்சியுடைய இந்த மாதத்தில்
 நாம் எந்த அளவுக்கு
நமது பாவங்களை
மன்னிக்குமாறு
அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி
அழுதோம்? ஜிப்ரீல் عليه السلام  அவர்கள் , யார் ரமலான் மாதம்
வந்தும் பாவமன்னிப்பு
கோரவில்லையோ அவன்
நாசமாகட்டும் என்று
பிரார்த்தனை செய்ய நபி  صلى الله عليه وسلم
அவர்கள் ஆமீன் சொன்னதை”
ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, பித்ரா, ஸதகா போன்ற
 நல்லமல்கள்
செய்தோமா? எவ்வளவு
கொடுத்தோம்? எத்தனை பேருக்கு
 கொடுத்தோம்?
நோன்பு பிடிக்க
வசதியில்லாத எத்தனையோ
ஏழைகள் இருக்கிறார்கள்.
அவர்களை சற்று
சிந்தித்தோமா? போன்ற
கேள்விகளுக்கு விடைகாண
வேண்டும்.
நம் அலுவல்களும்
அலட்சியங்களும்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை தடுத்து
விட்டனவா? உலக இலாபங்கள்
அவை செல்வமாக, அறிவாக
இருக்கட்டும். அது நம்மை
பராக்காக்கியிருப்பின் இந்த ரமலானை
 சரிவரத்
திட்டமிடவில்லை. ஏனைய நாட்கள் போன்று
 கழித்து விட்டோம்.
 அல்லாஹ்
அல்குர்ஆனில்,
“நீங்கள் கப்றுகளை சந்திக்கும்
வரையில் (பொருளை)
அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை
 (அல்லாஹ்வை
விட்டும்) உங்களை பராக்காக்கி
விட்டது” என்கிறான்.
ரமலானைத் தொடர்ந்து ஷவ்வால்
ஷவ்வால் மாதத்தில்
விஷேசமாக அதிக நன்மை பெற்றுத்
 தரக்கூடிய
சுன்னத்தான ஆறு நோன்புகள்
இருக்கின்றன. அவற்றை நோற்க
ரமலான் நோன்பாளிகள்
மறந்துவிடக்கூடாது. நபி صلى الله عليه وسلم
 அவர்கள் கூறினார்கள்:
“யார் ரமலானில் நோன்பு நோற்று
 அதனைத் தொடர்ந்து
வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு
நோன்பையும் நோற்கிறாரோ
அவர் அந்த வருடம் முழுவதும்
நோன்பு நோற்றவர்
போலாவார்.”
(ஆதாரம்: புகாரி, நஸாயி
தவிர்ந்த ஏனைய கிரந்தங்கள்)
எனவே, ஒரு வருடம்
நோன்பிருந்த நன்மையை பெற
முயற்சிப்போம். சில இமாம்கள்
ஷவ்வால் மாதத்தின் 2ம்
பிறையிலிருந்து நோன்பு நோற்க
 வேண்டும் எனவும், சில இமாம்கள்
 ஷவ்வால் மாதத்தில்
எந்தத் தினத்திலும் இந்த ஆறு நோன்பை
 நோற்க முடியும்
என்கிறார்கள். எனவே, ஷவ்வால்
மாதத்தில் அவரவர் நேரங்களை
திட்டமிட்டு நோன்பு நோற்கத்
தயாராவோம்.

நன்றி: அல்ஹஸனாத்
(ஜூலை 2015 இதழில்
வெளியான கட்டுரை)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 20-06-2017

No comments:

Post a Comment