✳🍓✳🍓✳🍓✳🍓✳🍓✳
🍇 *_அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)_* 🍇
*முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்:* 2⃣
🌴முதல் அகபா உடன்படிக்கைக்குப் பிறகு முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு யத்ரிபிற்கு வந்து பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தாரல்லவா? அப்பொழுது அங்கு இஸ்லாம் மெதுவாய் மீளெழுச்சி பெற ஆரம்பித்தபோது முஆத் பின் ஜபல் இளைஞர். பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கலாம்.
🍃கூர்மதி; எவரையும் ஈர்க்கும் நாவன்மை; இளமையின் புத்துணர்வு; சுருள் முடி; கரிய நிறக் கண்கள்; அழகிய வெண்மையான பற்கள் என்று பார்ப்பவரைக் கவரும் வசீகரத் தோற்றம்.
இந்த இளைஞரை இஸ்லாத்தின் வசீகரம் முற்றும் கவர, “இதுதான் வாழ்வியல் நெறி” என்று பிடித்துப்போக, ஏற்றுக் கொண்டு நுழைந்தார்.
🌿அதற்கு அடுத்து அகபாவில் இரண்டாம் முறை ஏற்பட்ட உடன்படிக்கையைப் பற்றி முன்னரே படித்தோம். எந்தத் தோழர் என்று நினைவிருக்கிறதா?
ஹபீப் பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. அந்த உடன்படிக்கையின் போது 73 ஆண்களும் 2 பெண்களும் சத்தியப் பிரமாணம் செய்தார்களில்லையா? அந்தக் குழுவில் இவரும் ஒருவர். இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனைப் பொழுதில் அங்கம் வகித்தவர்.
பிறகு யத்ரிப் திரும்பிய முஆத், தன் வயதினை ஒத்த நண்பர்களுடன் ஒரு குழு அமைத்துக் கொண்டார்.
🌱இளைஞர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் அவர்கள் சில செயல்களில் ஈடுபட்டனர். மௌட்டீகத்திலும் உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டு, இந்த இஸ்லாத்தை உணராமல் இருக்கிறார்களே ஊரிலுள்ள பெரியவர்கள் சிலர், அவர்களுக்கு எப்படி உணர்த்தலாம் என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினர். அவரவர் வீட்டிலுள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டம். பரபரவென்று காரியம் நடந்தது.
☘சில சமயங்களில் சிலர் வீட்டிலிருந்து அவர்கள் கண்ணெதிரிலேயே சிலைகளை எடுத்துச் சென்றுவிடுவார்கள்; சில சமயங்களில் இரகசியமாக!
அப்பொழுது யத்ரிபில் அம்ரு இப்னு அல்-ஜமூ எனும் பெயருடைய, வயதில் மூத்தவர் ஒருவர் இருந்தார். இவர் பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தோழர். பனூ சலமா கோத்திரத்தின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். தனது வீட்டில் பிரத்யேகக் கடவுள் சிலை ஒன்றை வழிபாட்டிற்காக அவர் வைத்திருந்தார்.
🍁அக்காலத்தில் மேல்குடி வகுப்பினர் வழக்கம் அது என்பதை அபூதர்தா ரலியல்லாஹு வரலாறு மூலம் படித்திருக்கிறோம். அந்தச் சிலையின் பெயர் மனாத். உயர்ரக மரத்தினால் செய்யப்பட்டிருந்த சிலை அது.
🌱வெகு சிரத்தையாக அதைப் பரமாரித்து வந்தார் அம்ரு இப்னு அல்-ஜமூ. ஒவ்வொருநாள் காலையும் அதை நறுமணத் திரவியங்களால் கழுவி, பட்டாடை அணிவித்து, சிறப்பான கவனிப்பு நடைபெறும்.
முஆத் பின் ஜபலோடு அம்ரு இப்னு அல்-ஜமூவின் மூன்று மகன்களும் அடங்கிய இளைஞர் குழு, ஒருநாள் இரவு அந்தச் சிலையை கடத்திச்சென்று பனூ சலமா குடியிருப்புப் பகுதிக்குப் பின்னாலிருந்த ஒரு குழியில் வீசிவிட்டனர்.
🌿காலையில் எழுந்த பெரியவருக்குச் சிலையைக் காணாமல் பலத்த அதிர்ச்சி! பல இடங்களில் தேடிப்பார்த்ததில் அது ஒரு குப்பையில் கிடந்தது. பலமான கோபம் ஏற்பட, ஆத்திரம் தீரக் கத்திவிட்டு, அந்தச் சிலையை மீண்டும் வீட்டிற்கு எடுத்துவந்து, கழுவி, குளிப்பாட்டி, நறுமணம் தடவி, பழைய இடத்தில் கொண்டு சென்று வைத்தார். “ஓ மனாத்! சத்தியமாகச் சொல்கிறேன், உன்னை இப்படிச் செய்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவேன்”
அன்றிரவு மீண்டும் அது நடந்தது. ஒரே வித்தியாசம். மனாத்தை, வேறொரு குழியில் எறிந்திருந்தனர் அந்த இளைஞர்கள்.
🍃காலையில் எழுந்து, மீண்டும் கூச்சலிட்டு, அரற்றி, அதை எடுத்து வந்து கழுவி, குளிப்பாட்டி அதன் இடத்தில் வைத்தார் அந்த முதியவர்.
மூன்றாவது இரவும் அந்தச் செயல் தொடர்ந்தது. இம்முறை அந்தச் சிலையைத் தேடிக் கொண்டுவந்து வைத்தவர், வாளொன்றை எடுத்து வந்து, அந்தச் சிலையில் கட்டிவிட்டுக் கூறினார், ”சத்தியமாகச் சொல்கிறேன்.
🌴யார் இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால் இம்முறை அவர்கள் உன்னைக் களவாட வரும்பொழுது, நீ இந்த வாளைக் கொண்டு உன்னைத் தற்காத்துக் கொள், எனக்குத் தூக்கம் வருகிறது” என்று நிம்மதியாகத் தூங்கச் சென்று விட்டார் அம்ரு இப்னு அல்-ஜமூ.
🌿மீண்டும் வந்து சேர்ந்தது அந்த இளைஞர் படை. சிலையையும் அந்த வாளையும் ஒருங்கே தூக்கிக் கொண்டு சென்று அந்தச் சிலையை, செத்துப்போன ஒரு நாயின் கழுத்துடன் கட்டி வேறொரு குழியில் தள்ளிவிட்டனர்.
காலையில் கண்விழித்த முதியவருக்கு,
☘“அட என்னடா இது தலைவேதனை, வாளிருந்தும் பிரயோசனமில்லையா?” என்று அதிர்ச்சி. இம்முறை பல இடங்களிலும் அதைத் தேடவேண்டியதாகிவிட்டது. இறுதியில் அது கிடந்த குப்பை மேட்டை அணுகி அந்தச் சிலை கிடந்த கோலத்தைப் பார்த்தார். சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர், “நீ மட்டும் உண்மையான ஒரு கடவுளாக இருந்திருந்தால் இப்படி ஒரு செத்த நாயுடன் இங்கு வந்து கிடக்க மாட்டாய்”
இளைஞர்கள் அந்த முதியவருக்குத் தெரிவிக்க விரும்பிய செய்தி சரியானபடி அவரை எட்டியது.
🍃பிறகு அம்ரு இப்னு அல்-ஜமூ ரலியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பை எட்டியது தனி வரலாறு. அது பிறகு இன்ஷா அல்லாஹ்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்குப் பிறகு யத்ரிப், "மதீனா"வாகியது. அதற்காகவே காத்திருந்ததைப்போல் அவரை நெருங்கி, அண்மி, உற்றத் தோழராகிப் போனார் முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு. உத்தமத் தூதரிடம் அவ்விதம் நெருங்கிக் கிடந்தால் என்னவாகும்? குர்ஆன் ஞானம் நேரடியாய் புதுப் பொலிவுடன் அப்படியே பாய்ந்தது. பயின்றார்; படித்தார்; கற்றார்; அறிவுச் சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கினார். தோழர்களின் மத்தியில் குர்ஆன் பற்றிய அளவற்ற ஞானமுடையவர்களில் ஒருவராகிப் போனார் முஆத்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றிக் கொண்டதை
ஹகீம் பின் ஹிஸாம் வரலாற்றில் பார்த்தோமல்லவா? அந்த வெற்றிக்குப்பின் குரைஷிக்குல மக்கள் கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர்.
🌴அப்படிப் புதிதாய் இணைந்தவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தைப் போதிக்கத் திறமையான ஆசான் தேவைப்பட்டார். நபியவர்கள் அத்தாப் இப்னு உஸைத் ரலியல்லாஹு அன்ஹுவை மக்கா நகருக்கு கவர்னராக நியமனம் செய்தார்கள். அவர் இருபது வயது இளைஞர். அடுத்து அந்நகர மக்களுக்கு குர்ஆனைப் போதிக்கவும் இஸ்லாமியச் சட்டங்களை கற்றுத்தரவும் மற்றொரு இளைஞரான முஆத் பின் ஜபல் நியமிக்கப்பெற்றார்.
இட்ட பணியைச் சிறப்புடன் செய்து, சிலகாலம் கழித்து மதீனா திரும்பினார் முஆத்.
மதீனாவில் நபியவர்கள் தனக்கு அருளப்பட்டுக் கொண்டிருந்த இறை வசனங்களை அத்தியாயங்களாய் முறைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆறுபேர் கொண்ட குழுவொன்று இருந்தது. அதில் வெகுமுக்கியமானவர்
ஸைது இப்னு தாபித் . அவர் தலைமையில் குர்ஆன், ஒரு நூலாகத் தொகுக்கப்பெற்ற விபரங்களைத்தான் அவரது வரலாற்றில் பார்த்தோம். அந்தக் குழுவில் மற்றொருவர் முஆத் பின் ஜபல்.
🍁இந்தக் காலத்தைப்போல் சம்பிரதாயத்துக்கு விண்ணப்பித்துவிட்டு, பின்னணியில் செய்யப்படும் பலமான பரிந்துரையால் கிடைக்கும் இடமா அது? ஞானம் வேண்டும். அத்தகைய குர்ஆன் ஞானம் இருந்தது முஆதிற்கு! வாய்ப்பு அமைந்தது!
அத்தகைய அவருடைய கல்வியறிவையும் ஞானத்தையும் தோழர்களும் உணர்ந்திருந்தார்கள். அதனால் முஆதின்மீது மிகுந்த மதிப்பு இருந்தது அவர்களுக்கு. அவர் உரையாடினால் மிகக் கவனமாய்ச் செவிசாய்த்துக் கேட்டுக் கொண்டார்கள்.
🍁அவருடைய இந்த அறிவாற்றலை நபியவர்களுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த கலீஃபாக்கள் அபூபக்ரும் உமரும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.
அதற்கு முன்னுதாரணமாய் ஒரு முக்கியப் பயணம் அமைந்தது.
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 *முஹம்மது ஃபாயஸ்*🏅
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 2 / 1 / 17
🏵🏆🏵🏆🏵🏆🏵🏆🏵🏆🏵
No comments:
Post a Comment