Thursday, 21 March 2019

உம்ரா செய்யும் முறை என்ன -1


மஹ்பூப் ஜான்

பதில் :இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல்

மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும்.

நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்."நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  "நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

இஹ்ராம் பற்றிய விளக்கம்

"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும்.

உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும்.

இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2194, 2195

இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்

1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது.

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. திருக்குர்ஆன் 2:196

பேன், பொடுகு, புண் போன்ற தொந்தரவுகளால் தலைமுடியை மழிக்க நேர்ந்தால் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்றேன். "அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று "ஸாவு' பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!'' என்றார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

2. நகங்களை வெட்டக் கூடாது.

"உங்களில் ஒருவர் துல்ஹஜ் பிறையைக் கண்டு, அவர் குர்பானி கொடுக்க எண்ணினால் தனது முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: முஸ்லிம் 3653, 3654

"குர்பானி கொடுப்பவர் முடியையும், நகங்களையும் வெட்டக் கூடாது'' என்ற இந்தத் தடை இஹ்ராம் கட்டியவருக்கும் பொருந்தக் கூடியது தான்.

3. நறுமணம் பூசக் கூடாது

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள்! அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் "தல்பியா' கூறியவராக எழுப்பப் படுவார்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851

"அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் அணிந்தவர் நறுமணம் பூசக் கூடாது என்பதை நாம் அறியலாம்.

4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது.

"இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான்(ரலி)

நூல்: முஸ்லிம் 2522, 2524

5. உடலுறவு கொள்ளக் கூடாது.

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! திருக்குர்ஆன் 2:197

6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது.

மேற்கண்ட வசனத்தில் உடலுறவு கூடாது என்பதைக் குறிக்க 'ரஃபத்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதில் ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்ற அனைத்தும் அடங்கும்.

உடலுறவு தான் கூடாது; மற்றவை கூடும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

7. வேட்டையாடுதல் கூடாது

நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களைச் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 5:94

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 5:95

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 5:96

இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட செயல்களில் இந்த ஏழு காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை ஆகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

பதிவு நாள்:21-03

No comments:

Post a Comment