Wednesday, 14 June 2017

இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் தொடர் - 5


இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது.

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார்படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி,முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக.

நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையாளர் என நம்பினோம் நீங்கள் கொண்டுவந்த இஸ்லாம் தான் சத்தியமென்று முழங்கினோம். எனவே, உங்களது கட்டளைகளை செவிமடுத்தோம.;எந்நேரத்திலும் உங்களுக்கு கட்டுப்படுவோம் என உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.

எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினாலும் நாங்களும் மூழ்குவோம் எங்களில் எவரும் பின் நிற்க மாட்டார்.

எதிரிகளோடு போராடுவதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக நாங்கள் போர் புரிவதில் உறுதியாக இருப்போம் உங்களுக்கு கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வின் அருளைப் பெற எங்களை அழைத்துச் செல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போரை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் அசத்தியத்தை தோற்கடிக்க வேண்டும் வேறு வழி முறையில் அதனை எதிர்கொள்ள முடியாது என்று உணர்ந்த பின் முஹாஜிர், அன்ஸார் ஸஹாபாத் தோழர்களில் இராணுவ உயர் மட்ட குழுவில் இருந்த சிலரை அழைத்து அது தொடர்பாக ஆலோசனை கேட்ட போது, அன்ஸாரி ஸஹாபி ஸஅத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உதிர்த்த வார்த்தைகளே இவை.

மறு பக்கம் முஹாஜிர்களில் அபூபக்கர், உமர் பின் மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹும்) அவர்கள் தமது கருத்துக்களை உறுதியாகத் தெரிவித்திருந்தார்கள். "இஸ்ரவேலர்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறியதைப் போல் நாம் உங்களிடம் கூற மாட்டோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு 'ஷபர்குல் ஃகிமாத்' (மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாமும் உங்களுடன் சேர்ந்து வருவோம்" என மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய கருத்தைச் செவியுற்ற நபிகளார் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அசத்தியம் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்து ஸஹாபிகளும் உணர்ந்து கொண்டார்கள் எவரும் பின் வாங்கவில்லை. எனவே தான் மக்கா வியாபார குழுவின் பொருளாதாரத்தை மாத்திரம் இலக்காக கொண்டு வெளியேறிய313 ஸஹாபிகளுக்கு பெரும் குறைஷி படையை எதிர்கொள்வது சிரமமாக இருக்கவில்லை.

முஸ்லிம் தரப்பிடம் இரண்டு குதிரைகள் 70 ஒட்டகங்கள் மாத்திரமே இருந்தன. ஓர் ஒட்டகத்தில் ஒருவர்,இருவர் அல்லது மூவராக மாறி மாறி பிரயாணம் செய்து "பத்ர்" பள்ளதாக்கை சென்றடைந்தனர். மறுபக்கம் குறைஷியரின் படை பதறியடித்துக் கொண்டு தம்மை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1,300 வீரர்கள், 100போர் குதிரைகள், எண்ணிலடங்காத ஒட்டகங்கள் மற்றும் 600 போர் கவச அங்கிகள் என போருக்கான அத்தனை ஆயத்தங்களுடனும் அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாமின் தலைமையில் குறைஷியர் படை தயாராகியது.

பத்ருப் போரில் மக்கா குறைஷிகள் வெற்றியீட்டினால் இஸ்லாத்தை புதைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஷைத்தான்

மனித உருதரித்து குறைஷிகளை தூண்டி விட்டான். எனினும், முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆட்சி புரியும் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி ஷைத்தானையும் அவனின் வாரிசுகiயும் அடக்கினான்.

இதனால், அசத்தியத்தின் முதுகெலும்பு உடைத்தெறியப்பட்டது. குறைஷியர் போர் வெறியுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கையில் வியாபாரக் குழுவின் தலைவரான அபூ ஸுப்யான் (அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை),மதீனா முஸ்லிம்களிடம் அகப்படாமல் தான் வேறாரு பாதையால் வியாபார குழுவை செலுத்தி தப்பித்து விட்டதாகவும் வியாபாரக் கூட்டம் மற்றும் அதன் செல்வங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் குறைஷியரை திரும்பி சென்று விடுமாறும் செய்தி அனுப்பினார்.

இச்செய்தியை கேள்விப்பட்ட குறைஷியருள் சிலர் திரும்பி விடலாம் என கருத்துத் தெரிவித்தனர். எனினும், தலைவன் அபூ ஜஹ்ல், "இறைவன் மீதாணையாக! நாம் திரும்ப மாட்டோம் பத்ருக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடுவோம் மது அருந்துவோம் பெண்கள் பாடலிசைப்பர் எமது சக்தியை,வல்லமையை மதீனா அரேபியர் அறிந்து எமக்கு அஞ்சி வாழ வேண்டும்" எனக் கர்ஜித்தான்.

எனினும், இச்சந்தர்ப்பத்தில் ஜுஹ்ரா கிளையினர் சார்பாக வந்திருந்த 300பேர் திரும்பிச் செல்லவே 1000பேருடன் குறைஷிப் படை பத்ர் பள்த்தாக்கு நோக்கிச் சென்று‘ஷஅல்உத்வதுல் குஸ்வா’ எனும் மேட்டு பகுதிக்கு பின்னால் தங்கியது.

அன்றிரவு மழை பொழிந்தது. அம்மழை குரைஷியருக்கு அடை மழையாகவும் முஸ்லிம்களுக்கு சாந்தமான தூறலாகவும் அமைந்தது. அதன் மூலம் அல்லாஹ் ஷைத்தான்களின் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தினான். முஸ்லிம்கள் தங்கியிருந்த மணற் பாங்கான பூமியை தங்குவதற்கு வசதியாக ஆக்கிக் கொடுத்தான். உள்ளங்களையும் பாதங்களையும் ஸ்திரப்படுத்தினான்.

நபியவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஹிஜ்ரி 2,ரமழான் மாதம் பிறை 17,வெள்ளிக்கிழமை பத்ர் மைதானத்தில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இறைவா இதோ குறைஷிகள் மமதையுடனும் கர்வத்துடனும் உன்னோடு போர் புரிய வந்துள்னர். உன் தூதரை பொய்ப்பித்தவர்களாக வந்திருக்கும் இவர்களைத் தோற்கடிப்பதற்காக எனக்கு வாக்களித்த உதவியை தந்தருள்வாயாக, இக்காலை பொழுதிலேயே அவர்களை அழித்து விடுவாயாக!" என பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபியவர்கள் படையினருக்கு போர் ஒழுக்கங்களை அழகுற விக்கிவிட்டு தலைமைக்கு கட்டுப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள். எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாது இப்போரில் வெற்றி பெற நபியவர்கள் எண்ணவில்லை.

போருக்கான உடல், உள, இராணுவ ரீதியாக அத்தனை முஸ்தீபுகiயும் முன்னெடுத்து விட்டு புனித ரமழான் நோன்பை நோற்றவர்களாகவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் உதவியை நாடினார்கள். "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்தையும் இராணுவ உத்தியையும் கச்சிதமாக நிறைவேற்றியமையும் பத்ரின் வெற்றிக்கு வழிவகுத்தது என அறிஞர் ‘ஸய்யித் அஸ்ஸாத்’குறிப்பிடுகின்றார்கள்.

தவிரவும் எதிரணிப் படையினரை உளவு பார்த்து அவர்களது பலம்,பலவீனங்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப தமது படையினரை பலப்படுத்துகின்ற பணியையும் நபிகளார் திறம்படச் செய்தார்கள். தெய்வாதீனமாக வெற்றி கிடைக்க வேண்டுமென ஸஹாபிகள் எதிர்பார்க்கவில்லை. அல்லாஹ்வும் அவர்களின் முயற்சிக்குத் தக்க கூலியாக மலக்குகளை இறக்கி மாபெரும் உதவி செய்தான்.

"அஹத்! அஹத்! " என்று கோஷமெழுப்பியவர்களாக எதிரிகளை அகோரமாகத் தாக்கி களத்தில் முன்னேறினார்கள் ஸஹாபிகள். உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனிடம் மனம் உருகப் பிரார்த்திக்கின்றார்கள்.

அல்லாஹ் பதிலளிக்கின்றான். "(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் இறைவனிடம் வேண்டிய போது அணி அணியாக உங்களை பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்."

ஸஹாபிகளோடு சேர்ந்து மலக்குகளும் போராடினார்கள். மலக்குகள் பக்கத்தில் நின்று போராடுவதைக் கண்ட சுராகா இப்னு மாலிக்கின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் போர் களத்தை விட்டு வெருண்டோடி கடலில் குதித்து விட்டான்.

தமது படை பலவீனப்பட்ட போதும் திமிருடன் தம்பட்டமடித்து முன்னேறி வந்த அபூ ஜஹ்லை இரண்டு ஸஹாபா சிறுவர்களின் வாள் முனை பதம் பார்க்கிறது. முஆத் இப்னு அம்ர் இப்னு ஜமூஹ் (ரழியல்லாஹு அன்ஹு), முஅவ்வித் இப்னு அஃப்ரா ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரே இவ்விரு இளம் தியாகிகள் இப்போரில் முஅவ்வித் இப்னு அஃப்ரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதானார்கள்.

கொல்லப்பட்ட அபூ ஜஹ்லுக்கு "இந்த சமுதாயத்தின் பிர்அவ்ன்" என்ற பட்டமும் சூட்டப்பட்டது. இப்போர் நிராகரிப்பார்களுக்கு பெரும் தோல்வியாகவும் இறை விசுவாசிகளுக்கு மகத்தான வெற்றியாகவும் முடிவடைகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் முடிந்த பிறகு பத்ரு மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கி மதீனா சென்றடைகின்றார்கள். நோன்பு நோற்ற நாளின் பெரும் பகுதியை தூக்கத்திலும் பொழுதுபோக்குகளிலும் கழிப்பவர்கள், பத்ரு களம் புனித ரமழானில் நோன்பாளிகளின் வாள் வீச்சில் வெற்றி கொள்ளப்பட்டதை மறந்து விடுகின்றார்கள்.

எனவே, ரமழான் மாதம் சோம்பேறிகளின் மாதமல்ல அது வீர வரலாற்று பெட்டகங்களின் திறவுகோல் அல்லாஹ்வுக்காக உயிரைத் துச்சமாக மதித்து களமிறங்கிய தியாகிகளின் மாதம் என்பதையே பத்ரு களம் எமக்கு கற்றுத் தருகிறது. உலகில் அராஜக சக்திகள், அநியாய அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும்,சமாதானமும் நிலவச் செய்து அல்லாஹ்வின் சட்டம் அகிலத்தை அரவணைக்கும் வரை பத்ருகள் ஓய்வதில்லை. நிச்சியம் அந்த பத்ரின் போது, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், இன்னும் கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)

முடிவுற்றது.

பதிவு நாள்: 15-06-2017

No comments:

Post a Comment