Tuesday, 13 June 2017

இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் தொடர் - 4



பின்னணி: நபி (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ர) தலைமையில் எண்மர் (8) கொண்ட குழுவை (12 பேர் என்ற குறிப்பும் உண்டு) உளவாளிகளாக, உறையிட்ட கடிதமொன்றைக் கொடுத்து, இரண்டு நாட்கள் பயணித்த பின்னர், அதைப் பிரித்துப் பார்க்கப் பணித்து அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் நீங்கள் மக்காவிற்கும் தாயிபிற்குமிடையிலுள்ள நக்லா எனுமிடத்திற்குச் சென்று,அங்கிருந்தவாறு குறைஷிகளின் நடவடிக்கையை உளவு பார்த்து,செய்திகளை அனுப்ப வேண்டும் எனவும், இதற்காக உமது தோழர்கள் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது.

இரண்டில் ஒன்று: அபூ ஸுப்யானின் தலைமையில் சிரியாவுக்குச் சென்ற வாணிபக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இதை முற்றுகையிடவே விரும்பினர். இதற்குத் தயாரானபோது, மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.

எனவே, நபியவர்கள் போர் புரிவதையே விரும்பினார்கள். வாணிபக் கூட்டத்தை இடைமறித்தால், அதிக செல்வம் கிடைத்துவிடும் என்றாலும் மக்கா காபிர்கள் மதீனா எல்லைக்குள் பிரவேசித்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்ற நபியவர்களின் தூர நோக்கு சிந்தனை இதில் வெளிப்படுகிறது.

எனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ (5) يُجَادِلُونَكَ فِي الْحَقِّ بَعْدَمَا تَبَيَّنَ كَأَنَّمَا يُسَاقُونَ إِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُونَ (6) وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَنْ يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ (7) لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ (8) إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ. (القرآن 8: 5-9)

(நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விசயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் (ஷபத்ர் யுத்தத்தின் போது உம்முடன் வருவதை) வெறுக்கக் கூடியவர்களாக இருக்க, நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:05-09)

உறுதிவெளிப்பாடு: நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் (ரளி), அபூபக்கர் (ரளி) போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும்,நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே பிரயத்தனப்பட்டார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாத (ரளி) அவர்கள் எழுந்து,அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்,எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)

அதேபோல் மிக்தாம் (ர) அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே! ஷநீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும்,முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது,நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)

மழை பொழிந்தது மனம்குளிர்ந்தது

அமைதித் தூக்கம்: முஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ. (القرآن 8:11)

(விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா?) (அல்குர்ஆன் 08:11)

மழை மூலம்தூய்மையாக்கல்: அல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி,நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி பாதங்களை உறுதிப்படுத்தினான்.

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ. (القرآن 8:11)

(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11)

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை: யுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.

இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள்.

(முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான். (சீரத் இப்னு ஹிஷாம்)

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)

வெற்றிக்கான காரணிகள்:

·         ஈமானிய பலம்.

·         அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும்.

·         முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை.

·         நபி (ஸல் ) அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும்.

·         புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும். காபிர்களின் லோகாயத இலக்கும்,

·         ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும்.

விளைவுகள்: முஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்:


·      முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல்.

·         இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல்.

·         நபி (ஸல்) அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல்.

·         மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 14-06-2017.

No comments:

Post a Comment