Saturday, 10 June 2017

இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் தொடர் - 1



☪ ரமளானில் நடைப்பெற்ற இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் ☪

👇👇👇

பத்ரு தரும் பாடம்

👇👇👇

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ فَاتَّقُواْ اللَّهَ لَعَلَّكُمْتَشْكُرُونَ (القرآن 3:123)

பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும்,தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.  (அல்குர்ஆன் 3:123)

பத்ருப்போரில் வானவர்களைக்கொண்டு உதவி

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ بَدْرٍ هَذَا جِبْرِيلُ آخِذٌ بِرَأْسِ فَرَسِهِ عَلَيْهِ أَدَاةُ الْحَرْبِ. (بخارى-3995)

இப்னு அப்பாஸ் (ரலி)அறிவிக்கிறார்கள்: பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்கள். (புகாரி-3995)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூம்! முன்னேறிச் செல்" என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது,அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார். உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்" என்று கூறினார்கள். (முஸ்லிம்-3621)

ரமளான் மாதம் பிறை 17-ல் இஸ்லாமிய முதல்போர் பத்ரு யுத்தம்.

பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் அந்த நிகழ்வை ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை அதிகரிக்கலாம்.

பத்ருப்போர் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டு (கி.பி.624) ரமளான் மாதம் 17ஆவது நான் வெள்ளிக்கிழமை நடந்தது. அது (உண்மையையும் பொய்மையையும்) பிரித்துக் காட்டிய நாள் ஆகும். அன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். அந்த நாளில் இணைவைப்பை அழித்தான்.இணைவைப்புப் படையினரையும் அதன் இருப்பிடத்தையும் நிர்மூலமாக்கினான்.

இத்தனைக்கும் அந்நாளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை(எதிரிகளின் எண்ணிக்கையைவிடக்)குறைவாகவே இருந்தது. முஸ்லிம்கள் அன்றைய தினம் 313 பேரே இருந்தனர். அவர்களிடம் 1குதிரைகளும், 70 ஒட்டகங்களுமே இருந்தன. எஞ்சிய அனைவரும் காலாட்படையினர் ஆவர். அவர்கள் அனைவரும் தேவையான (போர்த்)தளவாடங்கள்கூட அவர்களிடம் இருக்கவில்லை.

அன்று எதிரிகள் தொள்ளாயிரத்திலிருந்து ஓராயிரம்(9000-1000) பேர்வரை இருந்தனர்.எஃகு வாட்கள், தலைக் கவசங்கள்,நிறைவான தளவாடங்கள், கண்கவர் குதிரைகள், மற்றும் அபரிதமான நகைநட்டுகள் ஆகியவற்றுடன் அவர்கள் வந்திருந்தனர். அப்போது அல்லாஹ் தன் தூதரை கண்ணியப்படுத்தினான்.

தனது வேத அறிவிப்பையும் வேத வசனத்தையும் வெளியிட்டு நபி (ஸல்)அவர்களின் முகத்தையும் அவர்களுடைய படையினர் முகத்தையும் ஒளிரச் செய்தான்.ஸைத்தானையும் அவனுடைய கூட்டாளிகளையும் இழிவுக்குள்ளாக்கினான்.

இதானலேயே இறைநம்பிக்கையுள்ள அடியார்கள் மற்றும் இறையச்சமுள்ள அந்தப் படையினர்மீது தான் செய்த உதவியை எடுத்துரைக்கின்ற அல்லாஹ், ‘’நீங்கள் சொற்பமானவர்களாக இருந்தபோது, ‘பத்ரில்’ உங்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்திருக்கிறான்’’ என்று இந்த (3:123)வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

அதாவது நீங்கள் குறைந்த எண்ணிக்கையினராய் இருந்தபோது உங்களுக்கு அவன் உதவினான்.ஆதலால், வெற்றி என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதுதானே ஒழிய, கூடுதல் எண்ணிக்கையாலோ கூடுதல் தளவாடங்களாலோ கிடைப்பதன்று என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள் என்று இதன் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான்.  (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும்,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தாமே அணியை ஒழுங்கு செய்தனர். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற நற்செய்தி பேரிறையிடத்திருந்து வந்ததை எம்பெருமானார் (ஸல்) முஸ்லிம் வீரர்களுக்கு எடுத்துரைத்தார்கள்...

மக்காவின் இறை நிராகரிப்பாளர்களுடனான பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறி அவர்கள் கொல்லப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். பின்னர் பத்ரு போர் நடைபெற்று முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் கூறியவாறே அப்போரில் எதிரிகள் கொல்லப்பட்டனர் என்பதை அப்போரில் கலந்துக் கொண்ட நபித்தோழர்கள் அறிந்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு மெய்பிக்கப்பட்டதை உணர்ந்தார்கள்.

பத்ரு களம் கண்ட வீரத்தியாகிகள் (ஷுஹதாக்கள்)

01. உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி)

02. ஸஃப்வான் இப்னு வஹப் (ரலி)

03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து அம்ர் (ரலி)

04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ் (ரலி)

05. ஆகில் இப்னுல் பக்ரு (ரலி)

06. உபைதா இப்னுல் ஹாரித் இப்னு அப்துல் முத்தலிப் (ரலி)

07. உமைர் இப்னுல் ஹம்மாம் (ரலி)

08. யஸீது இப்னுல் ஹாரித் இப்னு கைஸ் (ரலி)

09. அவ்ஃப் இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ (ரலி)

10. மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு ரிஃபாஆ(ரலி)

11. மஸ்அத் இப்னு ஹத்மா (ரலி)

12. முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர் (ரலி)

13. ஹாரிதா இப்னு ஸுராக்கா (ரலி)

14. ராஃபிஃ இப்னுல் முஅல்லா (ரலி)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 11-06-2017.

No comments:

Post a Comment