Monday, 15 May 2017

*📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 3📓*

*🎯முன்னர் அருளப்பட்டது*

*📖அல்குர்ஆன்

*وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ*

*எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.*

*திருக்குர்ஆன்  14:4*

🔘 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன. நபிகள் நாயகத்துக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது என எண்ணக் கூடாது.

🔘 ஒவ்வொரு தூதருக்கும் அவரவரின் மொழியில் வேதங்கள் அருளப்பட்டன. முஸ்லிம்களில் சிலர் *"தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன்* ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன" எனக் கருதுகின்றனர். இது தவறாகும்.

🔘 எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன என்று திருக்குர்ஆன் கூறுகிறது. *(பார்க்க : திருக்குர்ஆன் 2:213, 14:4, 19:12, 57:25, 87:18,19)* ஆயினும் அவற்றின் பெயர்கள் நமக்குக் கூறப்படவில்லை.

 *🔘தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன்* ஆகிய நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. பெரிய அளவில் வழங்கப்படும் *கிதாப் (பெரிய ஏடு)* என்றும், சிறிய அளவில் வழங்கப்படும் *ஸுஹுஃப் (சிற்றேடு)* என்றும் வேதங்களை இரு வகைகளாகச் சிலர் பிரித்துள்ளனர்.

*🔘குர்ஆன், தவ்ராத், இன்ஜீல், ஸபூர்* ஆகிய நான்கும் முறையே நபிகள் நாயகம் (ஸல்), *மூஸா நபி, ஈஸா நபி, தாவூத் நபி* ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இவை மட்டுமே *கிதாப்* எனும் பெரிய ஏடுகள். மற்ற இறைத் தூதர்களுக்கு *ஸுஹுஃப்* எனும் சிறிய ஏடுகள் வழங்கப்பட்டன என்றும் கூறுகின்றனர். இதற்குத் திருக்குர்ஆனிலோ, ஏற்கத் தக்க நபி மொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.

*🔘திருக்குர்ஆன் 98:2 வசனத்தில்* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *"ஸுஹுஃபை ஓதிக் காட்டுவார்கள்"* என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம், பல வசனங்களில் *கிதாப்* என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் *ஸுஹுஃபு* என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து *கிதாப் என்பதும், ஸுஹுஃபு* என்பதும் ஒரே கருத்தைக் கொண்டவை என்பது தெளிவாகின்றது.

🔘 வேதம் என்ற அடிப்படையில் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருபவை தான் என்றாலும், தொகுக்கப்படும் விதத்தைப் பொறுத்து இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும். நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் *ஸுஹுஃபு*என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது. அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே தான் தொகுக்கப்படுவதற்கு முன்பே திருக்குர்ஆனைக் கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான். முன்னர் அருளப்பட்ட வேதங்களை நம்புவது என்றால் அவற்றை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

🔘 "முஹம்மது நபிக்கு மட்டும் தான் வேதம் அருளப்பட்டது; அதற்கு முன் எவருக்கும் அருளப்படவில்லை" என எண்ணாமல் "எல்லா இறைத் தூதர்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன" என்று நம்ப வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஏனெனில் முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் திருக்குர்ஆன் "அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து விட்டன; மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திருத்தப்பட்டன" எனவும் பல இடங்களில் கூறுகிறது. *(பார்க்க: திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41)* திருக்குர்ஆனைத் தவிர, மாறுதலுக்கு உள்ளாகாத எந்த ஒரு வேதமும் உலகில் கிடையாது என்பதையும் நம்ப வேண்டும். *(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 2:4, 4:60, 4:162)*

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 15-05-2017

No comments:

Post a Comment