Wednesday, 15 March 2017

🍛இஸ்லாத்தில் உணவு உண்ணும் முறைகள்🍲




🍛இஸ்லாத்தில் உணவு உண்ணும் முறைகள்🍲

#பாத்திரத்தில்_மூச்சு விடுவது_கூடாது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். (அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) நூல் : புகாரி-153)

விஞ்ஞானம் :

மனிதன் சுவாசிக்கும் பொழுது உள் இழுக்கும் காற்று OXYGEN ம் வெளியிடும் காற்று CORBON DIE OXIEDE ம் ஆகும். அந்த கார்பன்-டை-ஆக்ஸைடில் எண்ணற்ற கிருமிகள் இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நாம் ஊதினால் அக்காற்றின் கிருமிகள் உணவில் கலந்து பரவிவிடுகிறது. பிறகு அதை உட்கொள்வது உடல் கெடுதிக்கு அடித்தளமிடுகிறது. பல நபர்கள் சேர்ந்து சாப்பிடும் போது இவ்வாறு ஒருவர் செய்தால் அது அனைவரையும் பாதிக்கக் கூடியதாகவும் ஆகிவிடுகிறது.          (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

#உணவை_குறை_கூறக்_கூடாது
ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிடும் போது ஒரு போதும் உணவை குறை கூற மாட்டார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் சாப்பிடுவார்கள். பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுவார்கள். (நூல் : புகாரி)

சாப்பிடும் போது பேசுவது
சாப்பிடும் போது பேசுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுவது தவறாகும். இஸ்லாத்தில் அப்படி ஏதும் கூறப்படவில்லை. தேவையான பேச்சுக்களை பேசிக்கொள்வதில் தவறில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பேசியிருக்கிறார்கள். ஹள்ரத் அஷ்ரஃப் அலி தானவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : சாப்பிடும் பொழுது அதிகம் பேசிக்கொண்டே இருப்பது ஒழுக்கமல்ல. ஏனெனில் நம் முன் இருக்கும் உணவிற்கு நாம் கண்ணியமளிக்க வேண்டும். பேச்சில் மட்டும் கவனம் இருக்கும் அளவு பேசிக்கொண்டே இருப்பது மனதில் உணவின் கண்ணியத்தை போக்கிவிடுவதோடு தேவையைவிட அதிகம் சாப்பிட்டுவிடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. எனவே சிறு சிறு விஷயங்கள் தேவையான அளவு பேச்சுக்கள் பேசிக் கொள்ளலாம்.

அளவோடு உண்டு வளமோடு வாழ்!👌🏻
ஹள்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பை களில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்கா தவரை அவன் அழியமாட்டான்” என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானம் :

பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.
1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)
2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)
3. E.N.T. Diseases  (காது. மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)
4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)
5. Heart & Volves Diseases  (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)
6. Gall Bladder Diseases  (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)
7. Diabetese (நீரழிவு நோய்) ஷிuரீணீக்ஷீ
8. High Blood Pressure  (அதிக இரத்த அழுத்தம்)
9. Depression (மன அழுத்தம்)

மேலும் அவர் தேவையை விட அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட நோய்களின் அறிகுறிகள் தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.    (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

🍲மிகவும் சூடான உணவை உண்ணாதீர்!🍲
ஹள்ரத் சுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக சூடான உணவை சாப்பிடுவதை விட்டும் எங்களை தடுத்து சூடு தணிந்த பின்பு உண்ணச் சொல்லியுள்ளார்கள்.       (நூல் : ஷுஃபுல் ஈமான் லில் பைஹகீ)

ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : உணவை சற்று ஆற வைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் மிகச் சூடான உணவில் பரக்கத் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.        (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்)

விஞ்ஞானம் : 🍲

சூடான உணவை உண்பதால் பற்சிதைவு, நாவின் ருசிக்கும் திறனின் குறைபாடு, வாய்ப்புண்கள், குடல் சம்பந்தமான கெடுதிகள் ஏற்படுவது டன் உணவுக்குழாயும் வெகு சீக்கிரம் சேதமடைந்து விடுகிறது. (நூல்: ஷரஹுத் தரீகத்தில் முஹம்மதிய்யா)

செருப்பு அணிந்து உண்ணாதீர் :👢👠👡

ஹள்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நீங்கள் உண்ண ஆரம்பித்தால் உங்கள் காலணிகளை கழற்றி விடுங்கள். அது உங்கள் பாதங்களுக்கு இதமானது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                                          (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்)
உணவை நுகராதீர் :
உணவு ருசிக்க, சுவைக்க வேண்டிய பொருளே அன்றி நுகரக்கூடியதல்ல.
ஹள்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : மிருகங்கள் உணவை நுகருவதைப் போன்று நீங்கள் நுகராதீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.                    (நூல் : மஜ்மவுஸ் ஸவாயித்)

உணவை நுகருவதால் ஏற்படும் கெடுதிகள் :👃👃🏾

1) இது விலங்குகளின் பழக்கம்.
2) ஒருவர் மூக்கால் உணவை நுகருவது அருகிலுள்ளவர்களுக்கு அறுவறுப்பை ஏற்படுத்துகிறது.
3) உணவின் சூடான ஆவி அவர் மூக்குத் தண்டிற்கு சென்றடைவதால் அந்த மெல்லிய பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே உணவு கெட்டுப் போயிருக்குமோ..., என்று பரிசோதிக்க நாடினாலும் சுவைத்து தான் அறிய வேண்டுமே தவிர நுகரும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.       (நூல்: ஷரஹுத் தரீகத்தில் முஹம்மதிய்யா)

சாப்பிட்ட பின் விரல்களை நன்றாக சூப்புவதும் தட்டை நன்றாக வழிப்பதும்🙌

ஹள்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களில் ஒருவர் சாப்பிட்டு (முடிக்கு)ம் போது விரல்களை சூப்பட்டும். ஏனெனில் அவைகளில் எதில் இறைவனுடைய பரக்கத் (அருள்) இருக்கிறதென அவர் அறிய மாட்டார். இன்னும் கூறினார்கள் “(சாப்பிட்டு முடிக்கும் போது) தட்டை (நன்றாக) வழிக்கட்டும். ஏனெனில் உங்களுடைய உணவில் எதில் பரக்கத் இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.” என்று கூறினார்கள்.                     (நூல்: முஸ்லிம்)

விஞ்ஞானம் :

 பொதுவாக உணவில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மேலும் (Mineral Salts) தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் சாப்பிடும் பொழுது உணவின் அடிப்பகுதியிலும் விரல்களிலும் போய் சேர்ந்து விடுகிறது. எனவே தட்டை வழித்து விரல்களை சூப்பி சாப்பிடும் பொழுது இந்தச் சத்துக்கள் உடம்பினுள் சென்று செரி மானத்தை அதிகப்படுத்தி மனிதனுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மட்டுமின்றி மன அழுத்தத்தையும் நீக்குகிறது.          (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஜதீத் சையின்ஸ்)

உணவை வீண்விரயம் செய்வது கூடாது
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்பமாட்டான். (அல்குர்ஆன் 7:31)
ஒரேடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஜைத்தான் களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

சாப்பிட்டு முடித்ததும் கைகளை கழுகுவது🙌

ஹள்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக சாப்பிடும் முன்பும் பின்பும் கைகளை கழுவிக்கொள்வதால்  உணவில் பரகத் ஏற்படுகிறது.                                 (நூல் : அபூதாவூத்)

விஞ்ஞானம் :

சாப்பிட்ட பின் டிஸ்ஸு பேப்பரால் கைகளை துடைப்பதாலோ அல்லது கைகளை சூப்பி விட்டு கழுகாமல் அப்படியே விட்டுவிடுவதாலோ கிருமிகள் விரல் இடுக்குகளிலும் நக இடுக்குகளிலும் ஒன்று சேர்ந்து Septic ஆக வாய்ப்புள்ளது. இப்பழக்கம் தொடர்ந்தால் வெகு சீக்கிரம் தோல் வியாதிகளும் ஏற்படும்.                           (நூல் : சுன்னதே நபவீ அவ்ர் ஷதீத் சையின்ஸ்)

சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ

நமக்கு உணவு கிடைத்தது அது சுவையாக இருப்பது, அதை நம்மால் ருசிக்க முடிந்தது, பசி ஏற்படுவது, உடல் நலத்தோடு சாப்பிடுவது இதெல்லாம் இறைவன் நம்மீது சொரிந்துள்ள தனித்தனியான நிஃமத்துக்கள். இதற்கு இறைவனுக்கு நன்றி கூறும் பொருட்டு சாப்பாட்டு முடிந்ததும் இறைவனை புகழ வேண்டும்.

ஹள்ரத் ஸஃதுப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்  உங்களில் ஒருவர் சாப்பிட்டு முடித்ததும் அல்ஹம்துலில்லா ஹில்லதீ அத் அமனா வஸகானா வஷஅலனா மினல் முஸ்லிமீன் (எங்களுக்கு உணவளித்து குடிப்பதற்கு நீர் அளித்து மேலும் எங்களை முஸ்லிம்களில் ஆக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்) என்று ஓதிக்கொள்ளட்டும். (நூல் : திர்மிதி)

தினம் ஓர் சுன்னா கற்று அதனை வாழ்வில் கடைப்பிடிப்போம்... வெற்றி பெறுவோம்....

No comments:

Post a Comment