*நமது வழிகாட்டியும் பின்பற்ற வேண்டியதும் ரஸூல் ஸல் அவர்களின் வழிமுறை மட்டுமே.*
*சுன்னாவும் வேத வெளிப்பாட்டின் ஒரு பகுதி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும்.*
*1. நபியவர்களின் சொல்லும் வஹியே!*
“அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை.
“அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியேயன்றி வேறில்லை”
“வலிமைமிக்க அழகிய தோற்றத்தையுடைய (ஜிப்ரீல் எனும் வான)வர் இவருக்குக் கற்றுக் கொடுத்தார். (தனது இயற்கை அமைப்பில் நபியின் முன்) நேராக நின்றார்” (53:3-5)
நபி(ஸல்) அவர்கள் தனது மனோ இச்சைப்படி பேசுவதில்லை என்றும், அவர் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் வஹி எனும் வேத வெளிப்பாடே என்றும் இந்த வசனங்கள் பேசுகின்றன.
*“நான் வஹியைக் கொண்டே உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றேன் என (நபியே) நீர் கூறுவீராக! செவிடர்கள் எச்சரிக்கப்படும் போது, இவ்வழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள்.” (21:45)*
நபி(ஸல்) அவர்கள் வஹி மூலமாகத்தான் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது. இந்த அடிப்டையில் நபி(ஸல்) அவர்கள் கூறிய கூற்றுக்கள் வஹியாக அமைகின்றன. அவற்றை மறுப்பவர் வஹியை மறுப்பவராக கருதப்படுவார்.
*2. நபியின் செயலும் வஹியே!*
*“உமக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! இன்னும் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவனாவான்.” (10:109)*
உமக்கு வஹீ மூலம் அறிக்கப்பட்டதைப் பின்பற்றுவீராக! என அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தக் கட்டளைப் பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதைத்தான் பின்பற்றியுள்ளார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களது செயல்களும் வஹியாகவே அமைந்துள்ளன.
*“மேலும், உமது இரட்சகனிடமிருந்து உமக்கு வஹியாக அறிவிக்கப்படுபவற்றையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்” (33:2)*
இந்த வசனமும் இதே கருத்தைத்தான் தருகின்றது. பின்வரும் வசனங்கள் நபி(ஸல்) அவர்களின் செயல்களும் வஹிதான் என்பதை உறுதி செய்கின்றன.
“நான் தூதர்களில் புதியவனாக இல்லை. எனக்கும் உங்களுக்கும் என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹியாக அறிவிக்கப்படுபவற்றையே நான் பின்பற்றுகின்றேன். மேலும், நான் தெளிவாக எச்சரிப்பவனேயன்றி வேறில்லை” என (நபியே) நீர் கூறுவீராக!” (46:9)
“அவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவாக ஓதிக்காட்டப்பட்டால், “இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வாரும்ளூ அல்லது இதை மாற்றி விடும்” என நமது சந்திப்பை ஆதரவு வைக்காதோர் கூறுகின்றனர். “என் சுய விருப்பப்படி இதை மாற்றிவிட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக அஞ்சுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (10:15)
“அவர்களிடம் நீர் ஏதேனும் ஒரு வசனத்தைக் கொண்டுவராவிட்டால், “அதனை நீரே உருவாக்கியிருக்க வேண்டாமா?” என அவர்கள் கேட்கின்றனர். “எனக்கு என் இரட்சகனிடமிருந்து வஹியாக அறிவிக் கப்படுபவற்றையே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இரட்சகனிடமிருந்து வந்த தெளிவான சான்றுகளாகவும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு நேர்வழியாகவும் அருளாகவும் இருக்கின்றது” என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:203)
“”என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்குக் கூறமாட்டேன். எனக்கு வஹியாக அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! “பார்வையற்றவனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீPராக!” (6:50)
இந்த வசனங்கள் அனைத்தும் நபி(ச) அவர்கள் வஹியின் அடிப்படையிலேயே செயற்பட்டார்கள் என்பதை உறுதி செய்கின்றன. இந்த வசனஙகள் மூலம் நபி(ஸல்) அவர்களது சொல், செயல் என்பன வஹிதான் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
ஒரு நபியின் முன்னால் ஒரு செயல் செய்யப்பட்டு அது தவறாக இருந்தால் அந்த நபி நிச்சயமாக அதைக் கண்டிப்பார். அவர் கண்டிக்கவில்லை என்றால் வஹி அந்தச் செயலை அங்கீகரித்துள்ளது என்பதே அர்த்தமாகின்றது. இவ்வகையில் நபி(ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பன வஹியாக அல்லது வஹியின் அங்கீகாரம் பெறப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.
ஹதீஸின் பார்வையில்
நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது போன்றே “ஹதீஸ்”களும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
லைலதுல் கத்ர் இரவு பற்றி அறிவிப்பதற்காக ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தது குறித்து ஸஹீஹுல் புஹாரியின் 813 ஆவது ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
“உனது உம்மத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் யார் மரணிக்கிராரோ அவர் சுவனம் நுழைவார் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து கூறினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (புஹாரி: 2388)
இந்த செய்தியைக் கூறுவதற்காக ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்துள்ளதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது. இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறி நபித்தோழர்களை அழைத்துச் சென்று ஒரு கூட்டம் கொலை செய்தது. இவ்வாறு கொல்லப்பட்டது குறித்து ஜிப்ரீல்(அலை) வந்து “அவர்கள் தங்கள் ரப்பை சந்தித்தனர். அவன் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்” என அறிவித்தார்கள்…” (புஹாரி: 2801)
“நாங்கள் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் நுளையமாட்டோம் என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்” (புஹாரி:3227)
தாயிப் சம்பவத்தின் போது அல்லாஹுத் தஆலா ஜிப்ரீல்(அலை) அவர்களையும், மலைகளுக்குப் பொறுப்பான மலக்குகளையும் நபி(ஸல்) அவர்களிடத்தில் அனுப்பியதையும், ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் உரையாடியது குறித்தும் புஹாரி 3231 ஆவது ஹதீஸ் கூறுகின்றது.
“அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்ற யூதர் நபி(ஸல்) அவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்டார். இதற்கு ஒரு நபியால்தான் பதில் கூற முடியும் என்று கூறி அவர் கேள்வி கேட்க நபி(ஸல்) அவர்கள் சற்று முன்னர் இது பற்றி ஜிப்ரீல் எனக்கு அறிவித்தார் எனக் கூறி பதில் கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றார்” (புஹாரி: 3229)
“ஆயிஷா(ரழி) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஸலாம் கூறியுள்ளார்கள்” (புஹாரி:3768)
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கதீஜா(ரழி) அவர்கள் பற்றிப் பேசியதாகவும், அவர்களுக்கு ஸலாம் கூறியதாகவும், அவர்களுக்கு சுவனத்தைக் கொண்ட சுபசோபனம் கூறியதாகவும் புஹாரி 3820 ஹதீஸ் கூறுகின்றது.
பத்ர் வீரர்கள் சிறப்புப் பெற்றது போல் பத்ரில் பங்கு கொண்ட மலக்குகளும் சிறப்புப் பெற்றவர்கள் என்பதை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கூறியதாக புஹாரி 3992, 3993 ஆவது ஹதீஸ்கள் கூறுகின்றது.
பத்ர் போரின் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்ததாக புஹாரி 3995 ஆவது ஹதீஸ் கூறுகின்றது.
“ஜிப்ரீல்(அலை) அவர்கள் அண்டை வீட்டார்களைக் குறித்து உபதேசித்துக் கொண்டே இருந்தார்கள். அண்டை வீட்டாருக்கு வாரிசுரிமையில் பங்கு கொடுக்குமாறு கூறுவார்களோ என நான் அஞ்சுமளவுக்கு அந்த வஸீயத் இருந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்” (புஹாரி:6014) அண்டை வீட்டார் உரிமை பற்றி வலியுறுத்துவதற்காகவே ஜிப்ரீல்(அலை) அவர்கள் பலமுறை வந்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ் உறுதி செய்கின்றது.
நபி(ஸல்) அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு அந்தக் கேள்விகளுக்கு வஹி வந்த பின்னர் பதில் கூறியுள்ளார்கள்.
நன்மை தீமையைக் கொண்டு வருமா? என ஒருவர் கேட்ட போது (புஹாரி: 1465, 2842, 6427), உம்ராவுடைய ஆடை குறித்து ஒருவர் கேள்வி கேட்ட போதும் (புஹாரி: 1789) நபி(ஸல்) அவர்களுக்கு வஹி வந்து பதில் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு நோக்கும் போது சுன்னாவும் வஹி என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லாத அளவுக்கு உறுதியாகின்றது.
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி என்றிருக்கும் போது சுன்னாவைப் புறக்கணிப்பதும் சுன்னாவை மறுப்பதும், சுன்னாவில் சிலவற்றை ஆதாரமாக எடுக்க முடியாது என எடுத்தெறிந்து பேசுவதும் குர்ஆனின் தீர்வு இருந்தால் சுன்னா தேவையில்லை என்று கூறுவதும், சுன்னாவில் சிலது சட்டமியற்றவும், சிலது அகீதா பற்றிப் பேசவும் அருகதையற்றது எனக் கூறுவதும் வழிகேட்டின் வாயிலைத் திறப்பதாகவே இருக்கும்.
எனவே, சுன்னாவும் வேத வெளிப்பாடே என்ற சத்தியத்தில் உறுதியாக இருப்போமாக!…
பதிவு நாள்:17-02-2017.

No comments:
Post a Comment