*திருக்குர்ஆன் மனனம்*
- மௌலானா*கான் பாகவீ*
திருக்குர்ஆனைத் தவறோ தடுமாற்றமோ இல்லமால் மனனம் செய்கின்ற அற்புதமான கலை. பொதுவாக எல்லா முஸ்லிம்களும் குர்ஆனின் சில பகுதிகளையேனும் மனனம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான், தொழுகைகளில் குர்ஆன் அத்தியாயங்களை (சூரா) ஓதி, முறையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலும்.
*குர்ஆனின் தோற்றுவாயான ‘அல்ஃபாத்திஹா’ எனும் முதல் அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - 756)
அது மட்டுமன்றி, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: *இறைமறையில் ஒன்றுமே இல்லாத உள்ளம், குடியிருப்பவர் இல்லாத இல்லம் போன்றது. அந்த இல்லம் சிதிலமடையும்; அந்த உள்ளமும் சிதிலமடையும்.* (தாரிமீ)
இதன்றி, முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்து, தொடர்ந்து ஓதிவருபவர்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. நபித்தோழர் அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: *குர்ஆனை (மனனமாக) ஓதிவாருங்கள்! இந்தப் பிரதிகள்தான் இருக் கின்றனவே! (பார்த்து ஓதிக்கொள்வோம்) என ஏமாந்துவிட வேண்டாம்! ஏனெனில், குர்ஆனை மனனம் செய்த இருதயத்தை அல்லாஹ் நிச்சயமாக ஒருபோதும் வேதனை செய்யமாட்டான்.* (தாரிமீ)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர், கண்ணியம் நிறைந்த தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதை) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.* (முஸ்லிம் - 1462)
ஆக, திருக்குர்ஆனை மனனமிட்ட ஹாஃபிள்கள் வானவர்களுடன் இருக்கும் மரியாதையைப் பெறுகிறார்கள். மறுமையில் ஹாஃபிள்களுக்குக் கிடைக்கும் மாபெரும் தகுதியைப் பாருங்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: *குர்ஆனை மனனமிட்டவர் சொர்க்கத்தினுள் நுழையும்போது, “ஓதுங்கள்! (படித்தரங்களில்) ஏறிக்கொண்டே இருங்கள்” என்று கூறப்படும். அவ்வாறே, அவரும் ஓதுவார். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு படித்தரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்; அவருக்கு மனனமாக உள்ள கடைசி வசனத்தை ஓதுகின்றவரை.* (இப்னுமாஜா)
மனனப் பிரிவில் இருக்கும் மாணவர்களே! அல்லாஹ்விடம் உங்களுக்குள்ள மரியாதையைப் பார்த்தீர்களா? நன்கு தஜ்வீதுடன் தடுமாற்றமின்றி, பிழையின்றி, மனனம் செய்யுங்கள். வசனங்களின் வரிசைக் கிரமம் மாறிவிடாமல், ஒரே சொல் மறுபடி வரும் இடத்தில் குழப்பமடைந்துவிடாமல், உச்சரிப்பில் குளுறுபடி நேராமல், உருப்போடும்போதே மிகச் சரியாகவும் தரமாகவும் உள்ளத்தில் பதியச் செய்துவிடுங்கள்.
புனித ரமளானில் மட்டும் பயிற்சி எடுப்பது, மற்ற நாட்களில் தளர்ச்சி அடைவது என்று இருந்துவிடாதீர்கள். ஏனெனில், மறப்பதில் குர்ஆனுக்கே முதலிடம் என்றுதான் சொல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்: *குர்ஆனை (ஓதி அதை) கவனித்துவாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! கயிற்றில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தைவிட மிக வேகமாக குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்.* (புகாரீ-5033)
பதிவு நாள்:*21-02-2017*

No comments:
Post a Comment