⌛💎⌛💎⌛💎⌛💎⌛💎⌛
🍇 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🍇
*முஆத்பின் ஜபல் அல்-கஸ்ரஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்:* 4⃣
🍃அக்காலத்தில் பாலைவனத்தில் பயணம் என்பது கால்நடை வாகனங்களின் மீது மட்டுமே! இளைப்பாற சிறந்த தங்குமிடங்களோ, உணவிற்கு வாகான சிற்றுண்டி விடுதிகளோ எதுவும் இருந்ததில்லை.
🍁இக்காலத்தில் அரபு நாடுகளில் நாம் காணும் சொகுசுப் பயணத்திற்கும் அதற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. கடும் வெயிலில் நிகழும் அந்தப் பயணமே பெரியதொரு சவால். கிளம்பிச் சென்றார்கள் முஆதும் தோழர்களும். ஒரே நோக்கம் மட்டுமிருந்தது.
🌱மக்களுக்கு இறைக்கல்வி பயிற்றுவிக்க வேண்டும்; அதற்காக எத்தகைய சோதனைகளையும் தாங்கலாம். அந்த எண்ணம் தரும் சொகுசே போதுமானதாய் இருக்க - பயணித்தனர்.
யமன் சென்றடைந்த முஆத் மக்களையெல்லாம் அழைத்தார். பாடங்கள் துவங்கின.
🌴'கல்வி முக்கியம்', 'வாழ்வின் மேன்மைக்குக் கல்வி கட்டாயம்' என்பதில் நமக்கெல்லாம் அபிப்ராய பேதமில்லை. ஆனால் கல்வியென்பதன் அடிப்படை என்ன, எங்கிருந்து துவங்க வேண்டும் என்பதில்தான் மிகமிகப் பெரும்பான்மையோருக்கு விழிப்பும் இல்லை, உணர்வும் இல்லை. ரோமர்களின் நாகரீகமும் ஆளுமையும் அரேபிய எல்லைக்கு அப்பால் வல்லரசு சக்தியாய் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்க, பாலைவனத்தில் நாகரீகத்தின் வேறு பரிமாணத்தில் திகழ்ந்து கொண்டிருந்த அந்த மக்கள், பல்கலைக் கட்டிச் சிறக்க, உலக ஞானத்தில் போட்டியிட என்பதெல்லாம் இல்லாமல் நிதானமாய் வேறுவிதமான சிலேட்டும் பல்பமும் எடுத்து வைத்துக் கொண்டு பாடம் கற்க ஆரம்பித்தார்கள்.
ஏகத்துவம் உணருங்கள், இஸ்லாத்தின் அடிப்படையை அரிச்சுவடியாக்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் அவர்களுக்கு முதல் கட்டளை.
☘வெற்றி என்பதன் அருஞ்சொற்பொருள் அவர்களுக்கு வேறுவிதமாய் சொல்லப்பட்டது! “அப்படியா சேதி?” என்று சம்மணமிட்டு அமர்ந்து, மாய்ந்து வியந்து கற்க ஆரம்பித்தார்கள் அவர்களும்.
என்ன நடந்தது? அமர்ந்தவர்கள் எழுந்து நின்றபோது வல்லரசுகள் அவர்கள் காலடியில் வந்து வீழ்ந்தன!
அப்படியெனில் இதர ஞானம்? தேவையில்லையா? தடுக்கப்பட்டுள்ளதா? அது, காந்தத்தின் மீது வந்து பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளுமே இரும்பு, அப்படித் தானாய் நிகழும்! வரலாறு உணர்த்தும் விசித்திரம் அது!
🌱மாறாக, உலக ஞானத்தை அரிச்சுவடியாக்கிக் கொண்டு, அதில் சாதித்துவிட்டு, மீந்த பொழுதில் “படித்துத்தான் பார்ப்போமே” என்று இஸ்லாமியக் கல்வியை எட்டிப்பார்த்தால் என்னவாகும்? கண்களை விற்றுச் சித்திரம் வாங்கிய கதையாகிவிடும். மிகையில்லை! அதைத்தான் நிகழ்காலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
தூதுவரின் தூதர் முஆத் அற்புதம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நபியவர்களிடம் பயின்ற நேரடிக் கல்வியாளர் அல்லவா? போதனைகள் பிரமாதமாய் அவரிடமிருந்து வெளிப்பட, யமன் மக்கள் மகிழ்ந்து பருகிக்கொண்டிருந்தார்கள்.
☘யமனில் இஸ்லாம் வலுவாகிக் கொண்டிருந்தது. அப்பொழுது அந்தப் புதுப்பிரச்சினை முளைத்தது. எது? நமக்குப் பழைய பிரச்சினைதான் அது.
ஃபைரோஸ் அத்-தைலமி வரலாற்றில் பார்த்தோமே அஸ்வத் அல்-அன்ஸி என்ற பொய்யன்; “நானும் நபி” என்று அறிவித்துக் கொண்டானே, அவன் பிரச்சனை! குலப்பெருமையினாலும் பேச்சு வசீகரத்தினாலும் அவன்பின் மக்கள் கூட்டம் திரள, முஸ்லிம்களின் கூட்டம் ஒன்று மட்டும் கலிமாவையும் ஒற்றுமையையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றது.
🍃அஸ்வதிற்கு எதிராக அந்த உள்ளூர் முஸ்லிம்கள் அணிதிரண்டனர். ஆனால், அந்த முஸ்லிம் போர்வீரர்களின் பலம் ஒரே நகரத்தில் ஒருமித்துக் குவிந்தில்லாமல் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.
🌿அப்படிப் பரவியிருந்த குழு, தங்களுக்குள் ஒரு தலைவரை ஏற்படுத்திக் கொண்டது. அவ்விதமான ஒரு குழுவிற்கு முஆத் பின் ஜபல் தலைவர். அவரும் இதரப் பகுதிகளான ஹம்தான், ஹுமைர் ஆகியனவற்றின் தலைவர்களும் சரியான முறையில் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அஸ்வதிற்கு எதிரான தங்கள் போரைத் திறம்பட நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.
🍁ஒருவழியாக அஸ்வதை ஃபைரோஸ் அத்-தைலமி ரலியல்லாஹு அன்ஹு கொன்றொழிக்க, அந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்தது. அதையடுத்து சன்ஆ நகரம் மூன்று தலைவர்களின் பொறுப்பின்கீழ் வந்தது. அவர்கள் ஃபைரோஸ், தாதாவைஹ், ஃகைஸ். அப்பொழுது முஆத் பின் ஜபல் சன்ஆ வந்தடைந்தார்.
🌱அவரைக் கண்டதும் “நீங்கள்தான் சன்ஆ நகரின் கவர்னர்,” என்று அந்த மூவரும் ஏகமனதாக அறிவித்துவிட்டனர்.
அவர் சன்ஆவின் கவர்னராக மக்களின் இமாமாகத் தொழவைக்க ஆரம்பித்தார். மூன்று நாளே ஆகியிருக்கும். மதீனாவிலிருந்து செய்தி வந்து சேர்ந்தது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னுயிர் நீத்த செய்தி. மதீனா திரும்பினார் முஆத். நபியவர்கள் இல்லாத மதீனாவைக் கண்டு அவர் அடைந்த சோகமும் துக்கமும் அளவிட முடியாதது!
〰〰〰〰〰〰〰〰〰〰〰
🌟 *இன்ஷா அல்லாஹ் தொடரும்.....*
📝 *முஹம்மது ஃபாயஸ்*🏅
🌴 *கியாமத்
No comments:
Post a Comment