மஸ்ஜித்களின் உயிர் மூச்சு, ‘இபாதத்களும் சமூக சேவைகளும்’ ஆகும்.
‘இபாதத்கள்’ மஸ்ஜித்களின் உள்மூச்சாக இருக்கின்றன.
‘சமூக சேவைகள்’ மஸ்ஜித்களின் வெளி மூச்சாக இருக்கின்றன.
மஸ்ஜித்களின் உள்மூச்சு :
மஹல்லாவின் முஸ்லிம்கள் ‘தொழுகைக்காக மஸ்ஜிதிற்கு விரைவது’ உள்மூச்சின் முக்கியக் குறியீடாகும்.
கேள்வி : ஒவ்வொரு மஹல்லாவிலும் இந்த உள் மூச்சு எந்த அளவிற்கு இருக்கின்றது?
ஒரு பத்து சதவிகிதம் உள்ளே செல்கின்றது என்று வைத்துக் கொள்ளலாமா?
பின்னர் உள்மூச்சு தொண்டைக் குழி வரைதான் செல்கின்றது என்று பொருள்படும்.
அந்த நிலையில் ஒரு நோயாளியை என்னிடம் கொண்டு வந்தால் எனது சிகிச்சை முறை :
எனது உடனடி டயக்னோசிஸ் : நோயாளி ‘ஸக்ராத் ஹாலில்’ இருக்கின்றார்.
அவரை உடனடியாக ICU-ல் அட்மிட் பண்ணி உதவியாளர்களின் உதவியுடன் இறப்பின் விளிம்பில் இருப்பவரின் வாயின் வழியாக மூச்சுக் குழலுக்குள் குழாயை செலுத்தி வென்ட்டிலேட்டரின் மூலம் ஆக்சிஜன் கொடுத்து அவரின் உள் மூச்சை சீராக்குவேன்.
இந்த விளக்கம்... ஒவ்வொரு மஹல்லாவிலும் ‘மக்களின் தீனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களாகிய இமாம்கள்’...
தன்னைப் பின் தொடரும் மூன்று அணிவகுப்புகளைக் கொண்டு -
சமுதாய மக்களின் மீது அவர்களின் தீனை சீராக்குவதற்காக -
எவ்வாறு எவ்வளவு துரிதமாக செயல்பட வேண்டும்....
என்பதை சித்தரிக்கும் ஒரு விளக்கமாகும்.
மஸ்ஜித்களின் வெளி மூச்சு :
இது சமுதாய மக்களின் மீது அவர்களின் கல்வி – சமூக – பொருளாதார மேம்பாட்டிற்காக ஒவ்வொரு மஹல்லாவிலும் மேற்கொள்ளப்படும் சமூக சேவைகளாகும். எத்தகைய சேவைகள் மஸ்ஜிதின் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை முன்னர் பார்த்தோம்.
மஸ்ஜிதின் உள் மூச்சே பத்து சதவிகித அளவிற்கு மட்டும் இருக்கும்போது வெளி மூச்சு வலுவாக இருக்க முடியுமா?
மஸ்ஜிதுகளிலிருந்து வெளிப்பட வேண்டிய சமுதாய மேம்பாட்டு சேவைகளைப் பொறுத்தவரை அது மிகவும் நலிந்திருக்கின்றது.
அதை மீட்க வேண்டிய மஹல்லாவின் ‘துனியா விவகார மருத்துவர்கள்’ முத்தவல்லிகளும் நிர்வாகிகளுமே ஆவர்.
அவர்களின் நிலைமை என்ன?
அதைப் பற்றித் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :
ஒவ்வொருவருக்கும் ஒரு திசை உண்டு; அவர் அதன் பக்கம் திரும்புபவராகவே இருக்கின்றார்.
நாமறிவோம். பெரும்பாலான நிர்வாகிகள் ‘தாமுண்டு தம் தொழில் உண்டு’ என்ற ரீதியில் அவரவர் திசையிலேயே இருக்கின்றார்கள்.
மஸ்ஜிதிலிருந்து வெளிப்பட வேண்டிய சேவைகளைப் பற்றி – ‘அவை தம் மீதுள்ள கடமை’ என்பதை முற்றிலும் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால்...
அந்த சமுதாய மேம்பாட்டு சேவைகள் மஸ்ஜிதிலிருந்து வெளிப்பட்டால் மட்டுமே சமுதாய மக்கள் இமாம் – மஸ்ஜித் நிர்வாகம் எனும் கூட்டுத் தலைமையின் கீழ் ஒன்று சேர முடியும். அதற்குரிய வழி என்ன?
திருக்குர்ஆன் அதற்காக மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு வழிகாட்டுகின்றது : நீங்கள் நன்மையானவற்றின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள்.
அந்த நன்மை என்பது...
சமுதாய மேம்பாட்டு சேவைகள் மஸ்ஜிதிலிருந்து வெளிப்படுவதாகும்;
பின்னர் அதிலிருந்து முஸ்லிம் சமுதாயம் நடு நிலையான சமுதாயமாக உருவாகுவதாகும்;
பின்னர் அதிலிருந்து பெரும்பான்மையாக இருக்கும் பிற சமயத்தினர்...
முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து ஒரு மேன்மையான உபகாரமாக இஸ்லாமைப் பெற்று –
முஸ்லிம்களின் மீது தீங்கிழைப்பதிலிருந்து தம்மைத் தடுத்துக் கொண்டு –
முஸ்லிம்களுடன் நட்பையும் இணக்கத்தையும் வலுப்படுத்துவதாகும்.
இவற்றைக் கொண்டு,
முஸ்லிம் சமுதாயம் ‘தம்மை வெறுப்பவர்களை இல்லாமலாக்கி எதிர்ப்பவர்களை இயலாமையில் ஆக்கி’ உலக வாழ்க்கையில் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதாகும்.
மேற்காணும் விளக்கத்திலிருந்து மஸ்ஜித் நிர்வாகிகளைக் கொண்டு மஸ்ஜித்களிலிருந்து வெளிப்படும் சேவைகளில்தான்....
முஸ்லிம் சமுதாயம் முதலாவதாகத் தனக்குரிய தலைமையின் கீழ் ஒன்று சேர்வதையும் –
அதன் முடிவில் முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு கிடைப்பதையும் –
அல்லாஹ் ஃபீட் பண்ணி (உட்புகுத்தி) வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அறிந்து கொள்வோம் :
முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு ‘துவக்கத்தில்’ இமாம்களின் களப் பணியில் இருந்தாலும்....
அதற்குப்பின் அது ‘வழி நெடுக’ மஸ்ஜித் நிர்வாகிகளின் கல்வி – சமூக – பொருளாதார மேம்பாட்டு சேவைகளில்தான் ஆழமாகப் பதிந்திருக்கின்றது.
சிந்தித்துப் பார்ப்போம்.
முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் பாதுகாப்பும் விலகி.... எதிராளிகளும் யாஜூஜ் மாஜூஜ்களாக ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷத்துடன் சமுதாயத்திற்குள் ஊடுருவினால்.... ?
பாமர மக்கள் உயிரை இழப்பார்கள். ஆனால்...
அந்தஸ்து, செல்வம், பதவி ஆகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளால் மகிழ்ந்திருக்கும் கனவான்களோ... உயிருடன் உடமைகளையும் மானத்தையும் மரியாதையையும் இழப்பார்கள்.
ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமுதாயமோ.... தனது விலை மதிப்பற்ற குழந்தைகளையும் பெண்களையும் இழக்கும்.
இத்தகைய ஒரு மாபெரும் பிரளயம்.....
முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி – சமூக – பொருளாதார மேம்பாட்டு சேவைகளிலிலிருந்து மஸ்ஜித் நிர்வாகிகள் தம்மைத் தடுத்துக் கொள்வதில்.....
நீறு பூத்த நெருப்பாகக் காத்திருக்கின்றது.
மஸ்ஜித் நிர்வாகிகள் நீறு பூத்த நெருப்பாகக் காத்திருக்கும் மாபெரும் பிரளயத்தைப் பற்றி அஞ்ச வேண்டும்.
அல்லாஹ் வழிகாட்டுவது போல் நன்மையானவற்றின் பக்கம் – அதாவது மஸ்ஜிதிலிருந்து கல்வி – சமூக – பொருளாதார மேம்பாட்டு சேவைகளை வெளிப்படுத்துவதின் பக்கம் முந்த வேண்டும்.
அதற்காக அவர்கள் முந்தும்போது ஒவ்வொரு நகரிலும் அல்லாஹ் அவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு வருவான்.
அதில் உருவாகுவதே ‘நகர மஸ்ஜித் நிர்வாகிகளின் கூட்டமைப்பு’ ஆகும்.
இறுதியாக... அறிந்து கொள்வோம் :
ஒவ்வொரு மஹல்லாவிலும் முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் உருவாக்கித் தந்துள்ள ஒரே தலைமை : ‘இமாம் – மஸ்ஜித் நிர்வாகம்’
இமாம் தலைமையில் மஹல்லாவில் மேற்கொள்ளப்படும் தீனுடைய களப்பணியின் மூலம் முஸ்லிம் சமுதாயம் தனக்காக அல்லாஹ் நியமித்து வைத்திருக்கும் ‘ஒரே தலைமையைக் கண்டு கொள்ளும்’.
அப்போது மஸ்ஜிதின் உள் மூச்சு சீராகும்.
மஸ்ஜித் நிர்வாகிகள் நகர முக்கியஸ்தர்களின் உதவி ஒத்தாசையைக் கொண்டு மஸ்ஜிதிலிருந்து சமுதாய மேம்பாட்டு சேவைகளை வெளிப்படுத்தினால் மஸ்ஜிதின் வெளி மூச்சு சீராகும்.
அதில் முஸ்லிம் சமுதாயம் ஈர்க்கப்பட்டுத் தனக்காக அல்லாஹ் நியமித்து வைத்திருக்கும் ‘அதே தலைமையின் கீழ் ஒன்று சேரும்’.
அதைத் தொடரும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்... சமய நல்லிணக்கமும் எதிராளிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பதும் ஆகும்.
முடிவுற்றது.
No comments:
Post a Comment